Kadayam NithyakalyaniAmmaiUdanurai Vilvanathar Thirukkovil

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் ராம நதிக் கரையில் அமையப் பெற்றுள்ளது கடையம் நித்ய கல்யாணி அம்மை உடனுறை வில்வ வன நாத சுவாமி திருக்கோயில்.

சுவாமி பெயர் : வில்வ வன நாதர்.

அம்மை பெயர் : நித்ய கல்யாணி அம்மை.

திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம்.

தீர்த்தம்: பூஞ்சுனை தீர்த்தம், ராம நதி.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மா, சிவபெருமானை நோக்கி கடுந் தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன் தோன்றி, ஒரு வில்வப் பழத்தினை அவருக்கு வழங்கி அருள் புரிந்தார். சிவபெருமான் தனக்கு அளித்த அந்த வில்வ பழத்தை அவரின் ஆணைப்படி மூன்றாக உடைத்த பிரம்மன்., அவற்றை வடக்கே கயிலையில் ஒன்று, மத்தியில் மேரு மலையில் ஒன்று, தெற்கே பொதிகை மலை அடிவாரத்தின் துவாத சாந்த வனத்தில் ஒன்றும் என நட்டு வைத்தார். இந்த துவாத சாந்த வனமே இன்றைய கடையம் வில்வாரண்ய தலம் ஆகும்.

முற்காலத்தில் தேவர்களுக்கும் கம்பாசூரன் என்னும் அரக்கனுக்கும் மாபெரும் போர் நடைபெற்றது. அப்போது தேவர்களின் தலைவனான இந்திரன் அயோத்தி பேரரசரான தசரதரை போரில் தங்களுக்கு உதவ அழைத்தார். தசரதரும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று அசுரர்களைக் கொன்று குவித்து இறுதியில் வெற்றியும் பெற்றார்.

அசுரர்களை கொன்ற பாவத்தினால் தசரதருக்கு வீரஹத்தி தோஷம் உண்டாகி விட்டது. இதை நீக்கிக் கொள்ளும் பொருட்டு இத்தலத்தை அடைந்த தசரதர் வில்வாரண்யத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி நின்றார். சிவபெருமான் அவரின் தோஷத்தை போக்கியதாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

முற்காலத்தில் தசரதர் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிரவணன் என்ற ஒரு சிறுவன் பார்வையிழந்த தன் தாய் தந்தையரை தொட்டில் கட்டி காட்டு வழியாகத் தூக்கி சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் அவனது பெற்றோருக்கு தாகம் ஏற்படவே, அவர்களை ஓரிடத்தில் அமர்த்தி விட்டு அருகில் இருந்த சுனைக்கு சென்று நீர் எடுக்க சென்றான்.

அப்போது அந்த பகுதியில் வேட்டையாடி கொண்டிருந்த தசரதரோ, சுனையின் அருகே சலசலப்பு கேட்க, ஏதோ ஒரு மிருகம் தான் அங்கு பதுங்கி இருக்கிறது என்று எண்ணி, சத்தம் வந்த திசை நோக்கி அம்பு ஒன்றை எய்து விடுகிறார். அந்த அம்பு சிறுவனின் உடம்பை துளைத்திட அக்கணமே அந்த இடத்திலேயே அவன் வீழ்ந்து இறந்து விட்டான். அது கண்டு ஓடிச் சென்ற தசரதர் சிரவணை பார்த்து அதிர்ந்தார்.

பின்னர் சிரவணனின் பெற்றோரிடம் சென்று நடந்தவற்றை கூறி மன்னிப்பு கேட்டு மன்றாடினார். தங்கள் புத்திரனை இழந்துவிட்டதை அறிந்த அவனது பெற்றோர் மன வருத்தத்தில் தசரதனை நோக்கி, இன்று நாங்கள் எப்படி எங்கள் புத்திரனை இழந்து துன்பப்படுகிறோமோ, நீயும் அது போலவே உன் புத்திரனை பிரிந்து அந்த சோகத்தால் இறப்பாய் என்று சாபமளித்து விட்டு தங்கள் உயிரை துறந்து விடுகின்றனர். பின்னர் தசரதர் உடனே இங்கிருந்த வில்வ வன நாதரை வணங்கி, தான் அறியாமல் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்த ராமாயண புராணச் சம்பவம் நிகழ்ந்த தலம் இது தான் என்று மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இப்பகுதியில் குகை ஒன்றும் அதன் அருகே சுனை ஒன்றும் இன்றும் உள்ளன.

மேலும் இந்த சுனைக்கு அருகேயுள்ள பாறையில் இதனை விளக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலின் மரக் கதவில் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிரவணனுக்கு அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னதியில் தனி ஒரு சிலையும் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் தசரதரின் மகனான ராமபிரானும் இங்குள்ள நதியில் நீராடி, இந்த வில்வ வன நாதரை தரிசித்தார் என்றும் அதனால் தான் இன்றும் இங்குள்ள தத்துவசாரா நதிக்கு, ராமநதி என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

அம்மை நித்ய கல்யாணியின் சிறப்புக்கள்:

சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களை அழிப்பதற்காக உமாதேவி இப் பூமியில் அவதரித்து அவர்களை சம்காரம் செய்தருளினாள். இதனால் அம்மையின் பொன் மேனி கருமேனி யாகி விட, இந்த துவாத சாந்த வனத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தாள்.
தேவியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமானும் அவர் முன் தோன்றி அம்மையின் கரிய மேனியை பொன் நிற மேனியாக்கி, நித்ய கல்யாணியாக இருக்கும் படி வரம் அளித்து ஆட்கொண்டருளினார் என்று கூறப்படுகிறது.

பிற்காலத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் இருந்த இந்த நித்ய கல்யாணி அம்மை மிகுந்த உக்கிர தேவதையாக இருந்தாளாம்.இவளுக்கு பூஜை செய்வதென்றால், கடும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டி இருந்ததாம்.
இதில் சிறு தவறு நிகழ்ந்தாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் தண்டனைக்கு ஆளாகி விடுவார்களாம்.

இதனால் கோயில் பக்கம் செல்லவே அனைவரும் அஞ்சினார்களாம்.
பின் வந்த காலத்தில், பெரியவர்களின் பல யோசனைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட ஒரு சன்னதியில் அம்மை பிரதிஷ்டிக்கப்பட்டு, அம்மையிடம் இருந்த பதினாறு கலைகளில், பதினைந்து கலைகளைப் பிரித்து மற்ற ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டதாம். இப்படி செய்யப்பட்ட
பீடமே தரணி பீடம் என்று அழைக்கப்படுகிறது.

பதினாறு கலைகளுள் ஒரு கலையுடன் சாந்த தேவியாக கிழக்கு நோக்கி மறு பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னரே அம்மைக்கு எளிதாக பூஜைகள் நடைபெறத் துவங்கின.

இங்குள்ள நித்ய கல்யாணி அம்மை, பக்தர்கள் வேண்டும் வரங்களை நித்தமும் அருள்பவளாக கருதப்படுகிறாள். இங்கே நித்ய கல்யாணி அம்மையானவள் துர்கையாகவும், லக்ஷ்மியாகவும், சரஸ்வதியாகவும் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

சுவாமி வில்வ வன நாதர்:

கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருமேனியராக கம்பீரமாக காட்சியளிக்கிறார் வில்வ வன நாதர். இவருக்கு விசேஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும்.

அம்மை நித்திய கல்யாணி:

தெற்கு நோக்கிய கருவறையில், ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறுகரத்தை கீழே தொங்கவிட்டபடியும், சற்றே இடைநெளித்து, புன்னகை சிந்தும் முகத்தவளாக அம்மை நித்திய கல்யாணி அருள்புரிகிறாள்.

திருக்கோவில் சிறப்புக்கள்:

கடையம் வில்வ வன நாதர் வரலாறு கோயிலின் கருவறைச் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் விக்கிரம பாண்டியன் என்னும் மன்னரால் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது.

இங்குள்ள இறைவனுக்கு கலியுக ராமேஸ்வரமுடையார், தசரத ராமேஸ்வரமுடையார் என்ற திருப்பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கு வில்வ வனத்தில் ஈசன் சுயம்புவாகத் தோன்றியதால் அவர் வில்வ வன நாதர் எனப்பட்டார்.
இங்குள்ள வில்வமரத்தில் எப்போதாவது தான் காய் காய்க்கும். அந்த காயை
எடுத்து உடைத்தால் உள்ளே சதைப்பகுதி சிவலிங்க பாணம் போன்ற உருவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்காலத்தில் கடையக்குடி என்று வழங்கப்பட்ட இந்த தலம் தேவார வைப்புத்தலமாக திகழ்கிறது. ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாவது பதிகத்தில், மூன்றாவது பாடலில் இத்தலத்தினைப் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்த கடையம் ஊரைச் சார்ந்த செல்லம்மாளைத்தான் மகாகவி பாரதியார் திருமணம் செய்து கொண்டார் என்பதால் அவர் இவ்வூரின் மருமகன் ஆகிறார். இவ்வூரில் சில காலம் தங்கியிருந்த மகாகவி பாரதியார் வில்வவனநாத சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் இங்கு வரும் போது இங்குள்ள நித்யகல்யாணி அம்மை மீது பாடல்களையும் பாடி உள்ளார். காணி நிலம் வேண்டும் பராசக்தி என அவர் பாடிய பாடல் அவற்றுள் சிறப்பு பெற்றது ஆகும்.

திருக்கோவில் அமைப்பு:

கடையம் நகருக்கு மேற்கே வயல்வெளிகளுக்கு மத்தியில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது நித்யகல்யாணி உடனுறை வில்வவனநாதர் திருக்கோவில்.

முகப்பில் இருக்கும் சிறிய கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை அமையப் பெற்றுள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் வில்வ வன நாதர் சன்னதியும், தெற்கு நோக்கிய கருவறையில் நித்ய கல்யாணி அம்மை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

திருக்கோவில் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், சுப்பிரமணியர், அதிகாரநந்தி, சூரியன், சுரதேவர், அறுபத்து மூவர், சிரவணன், சப்த மாதர்கள், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், லிங்க நாதர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சனீஸ்வரர், பைரவர், நடராஜர், சந்திரன் மற்றும் நவக்கிரகங்கள் சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந் திருவிழா நடைபெறும். சித்திரையில் நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சுவாமி வில்வ வன நாதர், அம்மை நித்ய கல்யாணி தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.இது தவிர மாசி மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆடி வெள்ளி நந்தி களபம், புரட்டாசி நவராத்திரி, கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை மற்றும் மாதாந்திர பிரதோஷம், பெளர்ணமி பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.

அமைவிடம்:
திருநெல்வேலி மாவட்டம்., அம்பாசமுத்திரம் – தென்காசி வழித்தடத்தில் கடையம் அமையப் பெற்றுள்ளது. கடையம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 3 கி .மீ தொலைவில் வயல்வெளிகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கு சமீபத்திலும் இத் திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது.

-திருநெல்வேலிக்காரன்.

About

Avatar

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.