கடைஞ்ச கீரை

Kadanja Keerai2

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது கடைஞ்ச கீரை.

இதற்கு பெரும்பாலும் இங்கு கிடைக்குற அரைக்கீரை தான் பயன்படுத்தப்படும்.

கீரைனாலே திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில அரைக்கீரை தான் பிரசித்தம்.

சுற்றுபகுதி கிராமங்களில் இருந்து விடியாக்காலமே கீரை மூடைகள் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகர் பகுதிகளில் வந்து இறங்கிவிடும்.

பாளையங்கோட்டையில தெற்கு பஜார்ல லூர்துநாதன் சிலை முன்னாடியும், வடக்கு பஜார்ல காவலர் குடியிருப்பு முன்னாடியும் மொத்தமா கீரை மூடைகள் வந்து இறங்க, அங்கிருந்து தான் வியாபாரிகள், கீரைக்கார ஆச்சிகள் பிரிச்சு எடுத்து கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள்.

சைக்கிளில் வைத்தபடி தெருக்களில் “கீரை வேணுமா கீரை” என்றபடி உலா வரும் கீரைக்காரர் ஒருபுறம் என்றால், தலையில் சுமந்தபடி “அரைக்கீரை, அரைக்கீரை” என்று கூவியபடியே வளவு, சந்து மற்றும் வீட்டு வளாகத்துக்குள்ளேயே வந்து உரிமையாக விற்கும் கீரைக்கார ஆச்சிகள் மறுபுறம் என்று சிறப்பித்தே சொல்லலாம்.

Kadanja Keerai1

நான் சிறுவயதில் என் ஆச்சி வீட்டில் வளர்ந்த காலத்தில், எங்க ஆச்சி வீட்டுக்கு பதிவாக ஒரு கீரைக்கார ஆச்சி கீரை கொண்டு வரும். ஆச்சி சொளவுல கீரை வாங்கிட்டு போய் உள்ள வைச்சிட்டு, அதே சொளவுல அரைப்படி அரிசி அளந்து போட்டு வந்து கீரைக்கார ஆச்சி பையில தட்டுவாங்க. எங்க ஆச்சி வீட்டில அப்போ வயல்நெல் விளைஞ்சு, அத குத்தி அரிசியாக்கி வீட்டில பயன்படுத்திய காலம். கீரைக்கார ஆச்சி எப்படியும் தினசரி கீரை கொண்டுவருவாக. நாங்க வெள்ளி, செவ்வாய், முக்கிய விரத நாள் தவிர்த்து பதிவா கீரை வாங்குவோம். கீரைக்கார ஆச்சி பதிவா வர்றதால அவங்களுக்கு பதிவா எங்க ஆச்சி ஒரு போனில சூடா கருப்பட்டி காபி கொடுப்பாங்க. சில நேரம் காலை உணவு கூட உண்டு.

நான் சின்னவயசுல பாத்த அதே கீரைக்கார ஆச்சிய இன்னும் பாளையங்கோட்டை சந்தையில இப்பவும் பார்க்குறேன். இப்போ நான் கீரை வாங்க போனாலும் அதே பாசத்தோட பத்து ரூபாய் கொடுத்து கீரைக்கேட்டா, கன்னத்தை கிள்ளி கொஞ்சிட்டு, அம்புட்டு கீரையை அள்ளி என் பைக்குள்ள திணிக்கும்.

அரைக்கீரையை வாங்கி ஒரு நாள் கடைஞ்சா, மறுநாள் கொத்துக்கீரை, மறுநாள் புளிமுளகா கீரை, கீரைச்சாறு னு விதவிதமா சமைப்பாங்க.

முள்ளங்கி, தடியங்காய் சாம்பார் வைச்சா அன்னைக்கு கீரையை கடையறது ஆச்சி வழக்கம், புளிக்குழம்பு, உளுந்தஞ்சாதத்துக்கு கொத்துக்கீரை இருக்கும்.

கடைஞ்ச கீரை தனிசுவை தான், இத தனியா சாதத்துல போட்டு பிசைஞ்சு நெய் ஊத்தி சாப்பிட நல்லாயிருக்கும்.

சிறுகுழந்தைகளுக்கு எப்படி பருப்புல நெய் போட்டு பிசைஞ்சு கொடுப்பாகலோ, அதேமாதிரி இங்க சாதத்துல கடைஞ்ச கீரை போட்டு நெய் ஊத்தி பிசைஞ்சு குழந்தைக்கு கொடுக்கறதும் ரொம்ப பிரசித்தம்.

சரி இப்போ அரைக்கீரை கடையறத பார்ப்போமா?

kadanja keerai 5

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை – ஒரு கட்டு.
பூடு – 3பற்கள்,
உப்பு – தேவையான அளவு.
கடுகு, குத்து பருப்பு, எண்ணெய், மொளகா வத்தல் – தாளிக்க.

செய்முறை:

அரைக்கீரையை குப்பை பார்த்து முதிர்ந்த காம்புகள் நீக்கி கழுவி சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் அதிகமா விடாம போதுமான அளவு விட்டு வேக வைக்கனும். இறுதியா தண்ணீரை வடிக்கும் போது சத்துக்கள் பிரிஞ்சுறும்கறதால தண்ணி சரியா வத்துற அளவுல வேக வைக்கிறது நல்லது.

அவிஞ்ச கீரையை தண்ணி அதிகம் இருந்தா வடிச்சுட்டு, ஆற வைச்சு, அரவை பாத்திரத்துல போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தோல் நீக்கிய பூண்டையும் போட்டு அரைச்சு எடுத்துக்கணும்.

எங்க வீட்டுல இன்னும் கீரையை அவிச்சு கல் மரவையில போட்டு, கீரை மத்து வைச்சு கடையுற பழக்கம் உண்டு. இந்த கீரையை கடையறதுக்காகவே கல்மரவை, கீரை மத்து எல்லாம் திருநெல்வேலி வீடுகள்ல இருக்கும்.

சரி இப்போ அரைச்சு எடுத்த விழுதுல, கடுகு, குத்து பருப்போட ஒரு மொளகாத்தல கிள்ளி போட்டு தாளிச்சு கொட்டுனா அரைக்கீரை கடைசல் தயார்.

சில வீடுகள்ல தாளிக்கும் போது வெங்காயம் சேர்க்குற பழக்கமும் உண்டு. வேணும்னா சேர்த்துக்கலாம்.

kadanja keerai 4

மோர்க்குழம்பு, முள்ளங்கி சாம்பார், தடியாங்காய் சாம்பார், புளிக்குழம்பு கூடயும் தயிர்சாதத்துக்கும் தொட்டுக்க இந்த கடைஞ்ச கீரை ருசியா இருக்கும்.

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!