இன்று வைகாசி மூலம்! திருஞானசம்பந்தர் குரு பூஜை!

நம் வீடுகளில் திருமணம் நடைபெற்றால் தாம்பூலப்பை கொடுப்பது வழக்கம். சாதாரணமாக தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவை இடம்பெறும். வசதியானவர்கள் என்றால் விலைமதிப்புள்ள பொருட்கள் தருவார்கள். ஆனால் ஒருவர் தன் திருமணத்திற்கு வந்தவர்க்கெல்லாம் “சிவலோக முக்தி” தந்தார் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார். அவர் தான் நம் சைவத்தின் செல்லக் குழந்தை “திருஞானசம்பந்தர்”.

சீர்காழியில் அவதரித்த இவர் தன் மூன்று வயதிலேயே உமையாளிடம் ஞானப்பாலுண்டு “தோடுடைய செவியன்” என பாடத் தொடங்கினார். இவரின் கை நோகும் என ஈசன் பொற்றாளம் தந்தான், கால் நோகும் என சிவிகையும், வெயிலில் உடல் நோகும் என முத்துபந்தலும் ஈந்தார், பொற்காசு தந்தார், பாண்டியனின் சூலை நோய் தீர்க்க செய்தார், எலும்பை பெண்ணாக மாற்றி அருள் செய்தார். இப்படி சம்பந்தரை தன் செல்லக் குழந்தையாகவே கொண்டு பல அற்புதங்களை செய்வித்தார் சிவபெருமான்.

அப்படிப்பட்ட செல்ல குழந்தைக்கு திருமணம் என்றால் தந்தை என்ன கொடுப்பார்? வந்தவர் எல்லோருக்கும் தான் மட்டுமே தர இயலும் ” சிவலோக முக்தி” தந்தார். ஆம் 16 ம் வயதில் திருஞானசம்பந்தருக்கும் தோத்திர பூர்ணாம்பிகை எனும் பெண்ணிற்கும் சீர்காழி அருகே உள்ள பெருமணநல்லூர் என்னும் ஆச்சாள் புரத்தில் வைத்து திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்தவுடன் அசரீரியாக ஈசன் “திருமணத்திற்கு வந்தவர் யாவரும் சிவலிங்கத்தின் இருந்து வரும் ஜோதியில் கலந்து சிவலோக முக்தி பெறுக” என கூறிட, வந்திருந்த மக்கள் அனைவரும் சிவஜோதியில் கலந்து முக்தியும் பெற்றனர். இறுதியாக சம்பந்தர் பெருமானும் தனது மனைவியுடன் சிவஜோதியில் ஐக்கியமானார்.

இந்த நிகழ்வு நடைபெற்றது ஒரு வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்து அன்று தான் என்பதால், ஒவ்வொரு வருடமும் வைகாசி மூலத்தில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வருட வைகாசி – மூலம் நாளான இன்று நடைபெறும் குருபூஜையில் நாம் திருஞானசம்பந்தர் திருத்தாள் பணிந்து போற்றுவோமாக!

About Lakshmi Priyanka

Check Also

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!