இன்று சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாநகர சிவாலயங்களில் அப்பர் குரு பூஜை விழா நடைபெற உள்ளது. சிவபெருமானை போற்றும் தேவாரப் பாடல்கள் பலவற்றை பாடிய திருநாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமான் வரலாறு நாம் அறிந்ததே. இவர் சைவத்தில் இருந்து சமண சமயத்திற்கு மாறி, பின்னர் மீண்டும் தமக்கை திலகவதி அம்மையாரால் சைவ சமயத்திற்கு திரும்பி வந்து நூற்றுக்கும் அதிகமான சிவாலயங்களுக்கு நடந்தே சென்று உழவாரப்பணி செய்தும், தேவார பதிகங்கள் பாடியும் சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளார். சைவ சமயத்திற்கு சிறப்பு சேர்த்த அப்பர் பெருமான் தனது 81-ஆம் வயதில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று திருப்புகலூர் என்னும் ஸ்தலத்தில் உள்ள சிவாலயத்தில் வைத்து சிவபெருமானோடு இரண்டறக் கலந்து ஐக்கியமானார். எனவே சித்திரை சதயமான இன்று அவரின் குரு பூஜை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிவாலயங்களில் உள்ள அறுபத்துமூவர் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் அப்பர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாக இன்று நடைபெறும் குரு பூஜையில் பக்தர்கள் பங்கு கொள்ள அனுமதி இல்லை.