இடிசாம்பார்

idi sambar4

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது இடிசாம்பார்.

இது சாதத்துக்கு ஊத்தி சாப்பிடும் ஒரு குழம்பு வகை. சாதாரண சாம்பாருக்கும், இடி சாம்பாருக்கும் வித்தியாசம் உண்டு. குறிப்பா திருநெல்வேலி பகுதியில் தைப்பொங்கல், ஆவணி பொங்கல் மட்டும் விசேஷ நாட்களில் பிரத்யேகமாக இந்த இடி சாம்பார் செய்யப்படும்.

இந்த இடிசாம்பார் வைக்கிறதுக்காக பிரத்யேகமாக அன்னைக்கு புதுசாவே சேர்மானங்கள் கொண்டு பொடி இடிக்கப்படும். அக்காலங்களில் இந்த பொடியை உரலில் இட்டு இடிப்பார்கள்.

ஆக பிரத்யேகமாக இடித்து பொடி தயாரித்து செய்யப்படுவதால் இடி சாம்பார் என்று பெயர் வந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு.

நான் சின்னபுள்ளையா இருக்குறப்ப எங்க ஆச்சி வீட்டுக்கு போனா, சொந்த பந்தங்கள் எல்லாம் சேருற அன்னைக்கு எங்களுக்கு இடிசாம்பார் விருந்து தான். இதுக்காக சேர்மானங்களை வறுத்து உரலில் போட்டு உலக்கை வைச்சு இடிக்குறத பார்க்க அழகு, இடிக்குற சத்தத்தை கேக்கவும் அழகு, இடிக்கும் போது வர்ன வாசனையும் அழகு, இறுதியா களுந்து கொண்டு அரக்குற சத்தமும் அழகு என வர்ணிச்சுட்டே போகலாம். நானும் உரலில் உலக்கை கொண்டு இத இடிச்சிருக்கேன். களுந்து கொண்டு அரக்கிருக்கேன்.

idi sambar2

இப்பவும் எங்க வீட்டுல இடிசாம்பாருக்கு பொடி மற்றும் இட்லிக்கு பொடி உரலில் இடிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்போ பெரும்பாலும் இந்த பொடி அரவை இயந்திரத்துல தான் வீட்டில திரிக்காங்க. அதனால நீங்க திரி சாம்பார்னு கூட பெயரை மாத்திக்கலாம்.

தைப்பொங்கல் அன்னைக்கு பிரத்யேகமா நிறைய காய்கறிகள், கிழங்கு வகைகள்னு போட்டு இந்த இடிசாம்பார் வைப்போம். கூடவே அன்னைக்கு அவியல், பூசணிக்காய் பச்சடி, கதம்ப பொரியல், கூட்டுனு நிறைய வகைகள் இருக்கும். எப்படியும் சாப்பிட்டது போக மிச்சம் இருக்கும். இந்த மிச்சம் இருக்குற அவியல், பூசணிக்காய் பச்சடி, பொறியல் எல்லாத்தையும் இடிசாம்பார்ல கொட்டி ஒன்னாக்கி எங்க ஆச்சி மண்பானையில போட்டு விறகு அடுப்புல சுண்ட வைப்பாங்க. ஆகா அந்த வாசனை இருக்கே அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.

இத மறுநாள் பொங்கச்சோறோட, சுண்டக்கறி போட்டு விரவி நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டா சும்மா அவ்வளவு ருசியா இருக்கும்.

எப்படியும் இந்த சுண்டக்கறியை பக்குவப்படுத்தி அடுத்த ரெண்டு நாளைக்கு வைச்சு சாப்பிடுவோம். அதுலயும் இந்த சுண்டக்கறி தோசைக்கு தொட்டுக்க கூடுதல் சுவையா இருக்கும்.

நேத்து புளித்தண்ணிய பார்த்து தெரிச்சு ஓடிபோன நம்ம கோமதிசங்கர், ராமசாமி, செல்லப்பா அண்ணாச்சி, லட்சுமணன் தம்பி, நண்பன் ரகுராம் இவங்க எல்லாரும் கூட சுண்டக்கறினா தில்லிக்கு போயிருந்தா கூட விமானம் புடிச்சு கிளம்பி அவங்க அவங்க வீட்டுக்கு வந்துருவாங்க.?

இப்போ இந்த இடிசாம்பார் செய்முறையை பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

1/4 கப் துவரம்பருப்பு
எலுமிச்சை அளவு புளி
15 சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
2 முருங்கைக்காய்
4 வெண்டைக்காய்
2 கத்திரிக்காய்
5 துண்டு மாங்காய்
1/4 தேக்கரண்டி வெந்தயம்
1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
1 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி இலை
நல்லெண்ணெய்
உப்பு தேவையான அளவு

ingredients for sambar

இடி சாம்பார் பொடி இடிக்க:

10 மிளகாய் வத்தல்
1 தேக்கரண்டி துவரம்பருப்பு
1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு
50கிராம் கொத்தமல்லி
1 தேக்கரண்டி சீரகம்
1/2 தேக்கரண்டி அரிசி
1/4 தேக்கரண்டி வெந்தயம்

அரைக்க:

அரைமூறி தேங்காய் துருவல்
4 சின்ன வெங்காயம்
3 பூண்டு பற்கள்
1/4 தேக்கரண்டி சீரகம்

செய்முறை:

  • துவரம்பருப்பை கழுவி விட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்து உரலில் இடித்தோ (அ) அரவை இயந்திரத்தில் திரித்தோ எடுத்துக்கொள்ளவும்.
    குறிப்பு: இதனை கொஞ்சம் பிறுபிறுவென இடித்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை நறுக்கி கழுவி நறுக்கிக் கொள்ளவும், வெங்காயம், பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
  • அரைக்க கொடுத்த பொருட்களை அம்மியிலோ, அரவை இயந்திரத்திலோ அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலோடு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு குழம்பிற்கு தண்ணீர் சேர்த்துக் கூட்டிக்கொண்டு, நறுக்கிய காய்கறிகள், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். காய்கறிகள் அரைவேக்காடு வெந்தவுடன் உப்பு சேர்த்து இடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அரைத்து எடுத்த சேர்மானங்களையும், வேக வைத்த பருப்பையும் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.
  • பின் இருப்புச்சட்டி வைத்து, நல்லெண்ணெய் ஊத்தி காய்ந்ததும் முறையே கடுகு, குத்து பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இடிசாம்பாரில் கொட்டி, பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். கொதித்த பின் இறக்கி மல்லி இலைகளை தூவி மூடி வைத்தால் இடிசாம்பார் தயார்.

idi sambar1

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.