இளநீர் பாயாசம்

இளநீர் பாயாசம் மிகவும் எளிமையான மற்றும் விரைவாக செய்யக்கூடிய இனிப்பு வகை ஆகும். தென்தமிழகத்தில் மிகவும் பிரபலமான இந்த இளநீர் பாயாசம் பல்வேறு விழாக்களிலும் சிறந்த இனிப்பு உணவாக பரிமாறப்படும். இந்த பாயாசம் சுண்டக் காய்ச்சிய பசும்பால், தேங்காய் பால் ஆகியவற்றின் இளநீரின் தண்ணீர் மற்றும் வழுக்கை கலந்து தயார் செய்யப்படுகிறது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த இளநீர் பாயாசம் தயாரிக்கும் முறை பற்றி இங்கு நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • இளநீர் – 2 எண்ணம்.
  • பசும் பால் – 1 கப்.
  • தேங்காய் பால் – 1 கப்.
  • சீனி – அரை கிலோ.
  • ஏலக்காய் – 5.
  • முந்திரி பருப்பு – 15.
  • முந்திரி பழம் – 15.

செய்முறை:

முதலில் இளநீரை சீவி, தண்ணீரை தனியாகவும், வழுக்கையை தனியாகவும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அதில் பாதி அளவு வழுக்கையை, இளநீர் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மீதியிருக்கும் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மீதம் இருக்கும் இளநீர் தண்ணீருக்குள் போட்டு வைத்துக் கொள்ளவும். இப்போது பசும் பாலை நன்றாக காய்ச்சி அது பொங்கி வரும் போது, அதில் சீனியை சேர்த்து நன்றாக கிளறி பாலை சுண்ட காய விடவும். பின்னர் இதனுடன் நுணுக்கிய ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, முந்திரி பழம் ஆகியவற்றை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விட்டு அரைத்து வைத்துள்ள வழுக்கை – இளநீர் கலவையை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொள்ளவும். இப்போது இதனுடன் தேங்காய் பால் மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள இளநீர் வழுக்கை துண்டுகள் கலந்த தண்ணீரையும் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தால் இளநீர் பாயாசம் தயார். இதனை சூடாகவோ அல்லது பிரிட்ஜ்-ல் வைத்துக் குளிர்நிலையிலோ பரிமாறலாம்.

குறிப்பு:

இளநீர் வழுக்கை இளசாக இருந்தால் தான் பாயாசம் ருசியாக இருக்கும். முற்றிய வழுக்கை சேர்த்தால் ருசி இருக்காது.

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!