சேரன்மகாதேவி அம்மநாதர் சுவாமி திருக்கோவில்.
நவகைலாய ஸ்தலங்களில் இரண்டாம் தலமான சேரன்மகாதேவி அம்மநாதசுவாமி திருக்கோவில்.
சுவாமி: அம்மநாதர்,
அம்மை: ஆவுடையம்மை,
திருக்கோவில் விருட்சம்: ஆல மரம்,
தீர்த்தம்: தாமிரபரணி - வியாச தீர்த்த கட்டம்.
தல வரலாறு :
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் இரண்டாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் சேரன்மகாதேவி. உரோமச மகரிஷி இங்கு வந்தபோது அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
முன்பொரு காலத்தில் இந்தப் பகுதியில் இரண்டு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் உரோமச மகரிஷி வணங்கிய சிவாலயத்தை விரிவுபடுத்த விரும்பினர். ஆனால் அவர்களோ நெல் குத்தும் தொழில் செய்து வந்ததால் கோவில் கட்டுவதற்கான பொருள் ஈட்டுவது கடினமாக இருந்தது. கோவில் கட்டுவதற்காகக் கடினமாக உழைத்தும் சகோதரிகளால் கோவில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்க முடியவில்லை. எனவே அவர்கள் தங்களுக்கு உதவுமாறு சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான், ஒரு நாள் அந்தணர் ரூபம் எடுத்துச் சகோதரிகளிடம் உணவு வேண்டி வந்தார். சகோதரிகள் அவர்கள் சாப்பிட வைத்திருந்த உணவை அந்தணருக்கு அன்புடன் பரிமாறி உபசரித்தார்கள். பசி தீர்ந்த அந்தணர் அவர்களிடம் "வேண்டும் வரம் கேளுங்கள்" என்றார். சகோதரிகளோ அவர்களுக்கென்று ஏதும் கேட்காமல் சிவாலயம் எழுப்பத் தேவையான பொருளுதவி வேண்டும் என்று கேட்டனர். அவர்களின் தன்னலமில்லாத எண்ணத்தைக் கண்டு மகிழ்ந்த, அந்தணர் ரூபத்தில் இருந்த சிவபெருமான், கேட்ட வரத்தைக் கொடுத்தார். அன்று முதல் அவர்கள் இல்லத்தில் செல்வங்கள் பெறுக தொடங்கின. அதனை கொண்டு இந்தத் திருக்கோவிலை கட்டியெழுப்பியதாக இத்தல புராணம் கூறுகிறது. இதனை உணர்த்தும் வகையில் இரண்டு பெண்கள் நெல் குத்துவது போன்ற சிற்பங்கள் இங்குள்ள தூண்களில் காணப்படுகின்றன.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Cheranmahadevi thamirabarani river bathing point - 11min(3.4km)
- Pazhavoor Check dam (Melaseval dam) - 30min(10.8km)
- Suthamalli reservoir dam - 30min(14km)
- Ariyanayagipuram check dam
சேரன்மகாதேவி பெயர்க் காரணம்:
முற்காலத்தில் இந்தப் பகுதி சேர மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அப்போது இங்கு ஆட்சி செய்த சேர மன்னன் தன் மகளான மகாதேவியின் பெயரை இந்த பகுதிக்குச் சூட்டியதால் மகாதேவி மங்கலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அது சேரன்மகாதேவியென வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுவாமி அம்மநாதர்:
கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி அம்மநாதர் சுயம்பு லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ சந்தனக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
ஆவுடையம்மை:
கிழக்கு நோக்கிய தனி கருவறையில் ஆவுடையம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும், நின்ற கோலத்தில், புன்சிரிப்புடன் காட்சித் தருகிறாள்.
திருக்கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் வயல்வெளிகள் நிறைந்த இயற்கை சூழலில் அமையப்பெற்றுள்ளது இந்த கோவில். இங்கு சுவாமிக்கு தனி விமானத்துடனும், அம்மைக்கு தனி விமானத்துடனும் சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. இது தவிர உள்ளே நந்தி, பலி பீடம், கொடி மரம் போன்றவையும் வரிசையாக உள்ளது. மேலும் பரிவார மூர்த்திகளாக விநாயகர், சுப்பிரமணியர், அதிகார நந்தி, சூரியன், சந்திரன், தக்ஷிணாமூர்த்தி, கஜலக்ஷ்மி, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர்கள் காட்சிதருகிறார்கள். தெற்கு திசை நோயாக்கிய தனி சந்நிதியில் ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட நடராஜர், சிவகாமி அம்மை, காரைக்கால் அம்மை ஆகியோர் காட்சிதருகிறார்கள்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- Hotel Sree Annamalaiyar Park - 3-star
- THE HOTEL RAJA PALACE - 2-star
- Haris Residency
- Hotel Ambai Grand
திருக்கோவில் சிறப்புக்கள்:
- இங்குள்ள மூலவர் லிங்கம் சுயம்பு திருமேனி ஆகும்.
- இங்குள்ள ஈசனை வழிபட்டால் பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிப்பாக நடைபெற வேண்டி அரிசி தானம் மற்றும் அன்னதானம் செய்து வழிபடுகிறார்கள்.
- இங்குள்ள ஆவுடையம்மைக்கு மாதுளம் பழ சாறால் அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.
- இங்குள்ள நடராஜர் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட திருமேனி.
முக்கிய திருவிழாக்கள்:
மாசி மாத சிவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், ஐப்பசி கந்த ஷஷ்டி, மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்:
திருநெல்வேலி நகரிலிருந்து சுமார் 22 கி. மீ தொலைவில் உள்ளது சேரன்மகாதேவி அம்மநாதர் கோவில். இங்கு செல்லத் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நிறைய நகரப் பேருந்துகளின் வசதி உள்ளது. சேரன்மகாதேவி ஊருக்குள் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமையப்பெற்றுள்ளது.