Arumugamangalam Aayirathu Enn Vinayakar Kovil

விநாயகப் பெருமானே மூலவராக அமர்ந்து அருள்பாலிக்கும் ஆறுமுகமங்கலம் “ஆயிரத்தெண் விநாயகர்” திருக்கோவில்.

மூலவர் : ஆயிரத்தெண் விநாயகர்.

தல விருட்சம்: வில்வ மரம்.

தீர்த்தம்: தாமிரபரணி.

சிறப்பு சன்னதி: பஞ்சமுக விநாயகர்.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் கொற்கையைத் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை கோமாற வல்லபன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். இந்த மன்னன் ஆயிரம் யாகங்கள் செய்தவன் என்று போற்றப்படுகிறான். இவன் தான் செய்த யாகங்களுக்காக இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கொங்கணப் பகுதியிலிருந்து வேதியர்களை வரவழைத்தான். அந்த வேதியர்கள் சாளக்கிராம வடிவத்தில் மகாவிஷ்ணுவையும் சோணபத்திர கல் வடிவத்தில் கணபதியையும் அவரவர் வீடுகளில் வழிபட்டு வந்தனர். ஒருமுறை இவர்களை கொண்டு பிரம்மாண்டமான யாகம் ஒன்றினை நடத்த திட்டமிட்டான் பாண்டிய மன்னன். அந்த யாகமானது ஆயிரத்தெட்டு வேதியர்களைக் கொண்டு நடத்தும் படி ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆனால் ஆயிரத்தெட்டு அந்தணர்களுள் ஒருவர் கலந்து கொள்ள முடியாமல் யாகம் தடைப்பட்டது. அப்போது வேதியர்களின் வேண்டுதலின் பேரில் ஆயிரத்து எட்டாவது வேதியராக விநாயகப் பெருமானே கலந்து கொண்டு யாகத்தை நடத்தி பூர்த்தி செய்து அருளினாராம். இதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் அந்த இடத்தில் விநாயருக்கு தனித் திருக்கோயில் அமைத்து வழிபட்டான். ஆயிரத்தெட்டாவது வேதியராக விநாயகப் பெருமான் வந்ததால் “ஆயிரத்தெண் விநாயகர்” என்ற பெயரும் இவருக்கு வழங்கப்பெற்றதாக வரலாறு கூறப்படுகிறது.

மூலவர் ஆயிரத்தெண் விநாயகர்:

கருவறையில் விநாயகப் பெருமான், நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். ஆயிரத்தெட்டாவது அந்தணராக வந்த பெருமான் என்பதால் ஆயிரத்தெண் விநாயகர் என்ற பெயரில் காட்சித் தருகிறார்.

பஞ்சமுக விநாயகர்:

இங்கு தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சித் தருகிறார் பஞ்சமுக விநாயகர். இவர் ஐந்து முகங்கள் கொண்டு நின்ற கோலத்தில் அபூர்வ திருமேனியாக காட்சித் தருகிறார்.

திருக்கோவில் அமைப்பு:

ஊரின் மையப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறது ஆயிரத்தெண் விநாயகர் கோவில். கோவிலை சுற்றி அழகிய நான்கு தேர் வீதிகள் உள்ளன. கோவில் முகப்பில் தற்காலத்தில் கட்டப்பட்ட ராஜ கோபுரம் அமையப் பெற்றுள்ளது.

இராஜ கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடம், மூஷிக வாகனம் ஆகியன கருவறைக்கு நேர் எதிராக அமையப் பெற்றுள்ளது. அவற்றை வணங்கி படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கே, தெற்கு நோக்கிய தனி சன்னதியில் பஞ்சமுக விநாயகர் காட்சித் தருகிறார். அவரை வணங்கி உள்ளே நுழைந்தால், மகா மண்டபம் தாண்டி நேராக கருவறை. கருவறையில் மூலவராக ஆயிரத்தெண் விநாயகர் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவருக்கு வட பக்கம் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் காளஸ்தீஸ்வரர் மற்றும் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் கல்யாணி அம்மை ஆகியோர் காட்சித் தருகின்றனர். மகா மண்டபத்தின் தெற்கே உற்சவ மூர்த்திகளாகிய வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர், விநாயகர், நடராஜர், சிவகாமி அம்மை, சோமாஸ்கந்தர் ஆகியோர் உற்சவர்கள் மண்டபத்தில் காட்சித் தருகின்றனர்.

திருக்கோவில் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், சிவன், அம்மை, கோஷ்ட விநாயகர், வள்ளி, தெய்வானை உடனாய சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

திருக்கோவிலுக்குள் கோசாலை ஒன்றும் உள்ளது. இங்குள்ள கோவில் பிரகாரத்தில் சப்பரம் தூக்க பயன்படும் தண்டயங்கள் ( மூங்கில் கட்டைகள்) எண்ணெய் ஊற்றி தகுந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருவதைக் காணலாம். இவ்வாறு விநாயகரை மூலவராக கொண்டு, கொடி மரத்துடன், தேர் திருவிழா நடைபெறும் சிறப்புக்களுடன் இந்தக் கோவில் விளங்குகிறது.

திருக்கோவில் சிறப்புக்கள்:

இந்த கோவில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தலமாக விளங்குகிறது.

ஆதிசங்கரர் இத்தலத்தில் உள்ள விநாயகப் பெருமான் மீது தான் ‘கணேச பஞ்சரத்தினம்’ பாடியுள்ளார்.

இங்கு ஆதிசங்கரர் தனது கரங்களால் எழுதிய கணேச பஞ்ச ரத்னத்தின் பிரதி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.

பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில் பிற்காலங்களில் கிருஷ்ண தேவராயர் வம்சத்தினர், நாயக்க மன்னர்கள், பின்னாள் திருவாவடுதுறை ஆதீனத்தாலும் மற்றும் பொதுமக்களாலும் திருப்பணிகள் செய்து விரிவுபடுத்தப்பட்டு 2008ஆம் ஆண்டு ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த திருக்கோவில் கொடிமரம், பலிபீடம், மூஷிக வாகனம் அமையப்பெற்று விநாயகருக்கான தனிக் கோவிலாக விளங்குவதும், இங்கு விநாயகருக்கு தேரோட்டம் நடைபெறுவதும் சிறப்பு.

நவகிரகங்களில் கேது கிரகத்தின் அதி தேவதையான மகாகணபதி, இங்கு காளஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மையுடன் அமைந்திருப்பதால் இந்த தலம் கேது தோஷப் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

இங்கு விநாயகருக்கு நூற்றியெட்டு அல்லது ஆயிரத்தெட்டு தேங்காய் திருக்கண் சாற்றி வழிபடுவது சிறப்பம்சம் ஆகும்.

இங்கு ஐந்து முகங்கள் கொண்டு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பஞ்சமுக விநாயகர் உற்சவ திருமேனி சிறப்புப் பெற்றதாகும்.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந் திருவிழா நடைபெறும். இந்த விழாவின் ஏழாம் நாள் மற்றும் எட்டாம் நாளில் இங்கு நடராஜரும், பஞ்சமுக விநாயகரும் இணைந்து மூன்று காலங்களில் திரு வீதி உலா வருவார்கள். பத்தாம் திருநாள் அன்று இங்கு விநாயகருக்கு தேரோட்டம் நடைபெறும்.

ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.

இது தவிர மாதாந்திர சங்கடகர சதுர்த்தி, தமிழ் மாத பிறப்பு, மார்கழி பிள்ளையார் நோன்பு ஆகிய நாட்களில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரில் இருந்து வட கிழக்கே சுமார் 48 கி. மீ தொலைவில் உள்ள ஏரல் என்னும் ஊரிலிருந்து 4 கி. மீ தொலைவில் ஆறுமுகமங்கலம் அமையப் பெற்றுள்ளது. திருநெல்வேலியில் இருந்து ஏரலுக்கு பேருந்து வசதிகள் உண்டு. ஏரலில் இருந்து தனியார் வாகனங்களில் சென்று வருவது சிறப்பு.

– திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.