அம்பலவாணபுரம் உழக்கரிசி பிள்ளையார் கோவில்
திருநெல்வேலி மாவட்டம் - அம்பலவாணபுரம்., உழக்கரிசி விநாயகர் (எ) கருணை விநாயகர் திருக்கோவில்.
திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் அம்மையப்பர் திருமணத்தின் போது தாழ்ந்த தென் பகுதியை சமன் செய்ய பொதிகை மலை பகுதிக்கு வந்தார் தமிழ் முனிவர் அகத்தியர். அப்போது பல தெய்வங்களை இந்த பகுதியில் பிரதிட்சை செய்து வணங்கினார் அவர்.
அதுபோலவே அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பிள்ளையார் தான் இந்த உழக்கரிசி பிள்ளையார். காலப் போக்கில் இந்தப் பிள்ளையார் இருந்த இடத்தினை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார். 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது இந்த பகுதியில் ஒரு ஆங்கிலேயர் துரை வேட்டையாட வந்தார்.
அவர் இந்த வழியாக வரும் போது வெள்ளைதக்கார துரையின் குதிரை கால் பட்டு மீண்டும் வெளிப்பட்டார் உழக்கரிசி பிள்ளையார். அப்போது குதிரையில் குழம்படி பட்டு பிள்ளையார் மீது ரத்தம் பீரிட்டது. இதை கண்ட வெள்ளையர் அரண்டு போய் விட்டார். அந்த பிள்ளையாரின் ஆற்னலை உணர்ந்த அவர் உடனே அங்கிருந்த மக்களிடம் இந்த பிள்ளையாரை நீங்கள் முறைப்படி வைத்து வணங்குங்கள். நான் அதற்கு உதவி புரிகிறேன் என்று கூறினார். மக்கள் சரியென்று அந்த பிள்ளையாரை மீண்டும் பிரதிட்சை செய்து வணங்க ஆரம்பித்தனர்.
அந்த வெள்ளைத்துரை இந்த பிள்ளையாருக்கு மானியமாக தினமும் உழக்கு அரிசி கொடுக்க உத்தரவு பிறப்பித்தார். ஆகவே இந்த பிள்ளையாருக்கு "உழக்கரிசி பிள்ளையார்" என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இவரை வணங்கும் போது பக்தர்களுக்கு கருணைக் கடலாய் அருள்புரிவாராம் . ஆகவே அவருக்கு கருணை பிள்ளையார் என்ற பெயரும் வந்ததாம்.
மூலவர் உழக்கரிசி விநாயகர்:
கருவறையில் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் கருணை ததும்பும் திருமுகத்துடன் அழகாக காட்சி அளிக்கிறார். விசேஷ காலங்களில் இவருக்கு கவசம் சாத்தியும், சந்தன காப்பு சாத்தியும் அலங்காரம் செய்யப்படும்.
உற்சவர் உழக்கரிசி விநாயகர்:
இங்கு உற்சவர் விநாயகர் நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அழகிய திருமேனியராக எழுந்தருளி இருக்கிறார்.
திருக்கோவில் அமைப்பு மற்றும் சிறப்புக்கள்:
அம்பலவாணபுரம் பெரிய தெருவில் அமையப் பெற்றுள்ள இந்த திருக்கோவில் தற்கால கட்டிட அமைப்பில் உள்ளது. முகப்பில் சிறிய விநாயகரின் சுதை வடிவம் அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் தாண்டி கருவறை உள்ளது. உள்ளே கருவறையில் மூலவர் மற்றும் உற்சவ பிள்ளையார் காட்சித் தருகிறார்கள்.
வெளித் திருச்சுற்றில் பரிவார மூர்த்திகளுக்கு தனித் தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன.
இந்த திருக்கோவில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதினத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய திருவிழாக்கள்:
இங்கு ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இங்கு மார்கழி மாதம் அதிகாலை முழுவதும் திருக்கோவில் நடை திறக்கபுபட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறும்.
இது தவிர சித்திரை விசு, தமிழ் மாதப் பிறப்பு, சங்கடகர சதுர்த்தி ஆகிய நாட்களில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அமைவிடம்:
திருநெல்வேலி மாவட்டம், அம்பலவாணபுரம் ஊரில் இந்தக் கோவில் அமையப் பெற்றுள்ளது. திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கி. மீ தொலைவில் உள்ள இக் கோவிலுக்கு செல்ல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் புறநகர் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.
-திருநெல்வேலிக்காரன்.